Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
யாழ்ற்ரன் கல்லூரியின் வரலாற்றுச் சுருக்கம்
Monday, 25 October 2010 16:51

இலங்கைத் திருநாட்டில் சைவப்பாரம்பரியமூடான ஆங்கிலக் கல்விக்கு வித்திட்டவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் ஆவார். இவரின் வழியைப் பின்பற்றி காரைநகர் அருணாசல உபாத்தியாயர், இந்துபோட் இராசரத்தினம் ஆகியோர் ஊர்கள் தோறும் சைவ ஆங்கில வித்தியாசாலைகளை நிறுவினர். இதன் பேறாகவே பின்னர் இவை இந்துக்கல்லூரிகளாக தோற்றம் பெற்றன.

இவ்வாறு காரைநகரிலும் இந்துக்கல்லூரி தோற்றம் பெற்று சைவப் பாரம்பரியமூடான ஆங்கிலக்கல்விக்கு வித்திட்டது. அதே சமயம் காரைநகரில் கிறிஸ்தவப் பாரம்பரியமூடான ஆங்கிலக் கல்வியை சாமி பள்ளிக்கூடம் என்று அழைக்கப்பட்ட கிறிஸ்தவப் பாடசாலையும்(தற்போது அல்லின் வீதி ஆரம்பிக்கும் சந்திக்குத் தெற்குப் பக்கத்தில் அமைந்திருந்தது) வழங்கி வந்தது. இங்கு மாணவர் தொகை படிப்படியாக வீழ்ச்சியடைய அது மூடப்படவேண்டியதாயிற்று.

இதனால் காரைநகர் மேற்கிலே ஒரு சைவ ஆங்கில வித்தியாசாலை நிறுவும் எண்ணம் மேற்கில் உள்ள பெரியவர்களிடம் தோற்றம் பெற்றது. எனவே அவர்கள் பிரம்மஸ்ரீ கா.சி.மகேச சர்மா அவர்கள் தலைமையில் 1946ம் ஆண்டு மார்கழி மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் திரு.ஆ.தியாகராசா (காரைநகர் இந்துக்கல்லூரி முன்னாள் அதிபர்) அவர்களின் ஆயிலி இல்லத்தில் கூடினர். அக்கூட்டத்தில் பின்வரும் பெரியார்கள் சமுகமளித்து சில தீர்மானங்களை நிறைவேற்றினர்.

  1. பிரம்மஸ்ரீ கா.சி.மஹேசசர்மா (நொத்தாரிசு)
  2. திரு.வே.தில்லைநாதன் (அப்புக்காத்து)
  3. திரு.ச.வைத்திலிங்கம்(மலாயன் பென்சனியர்)
  4. திரு.சி.ஆ.கணபதிப்பிள்ளை(மலாயன் பென்சனியர்)
  5. திரு.ஆ.தியாகராசா(அதிபர்-இந்துக்கல்லூரி,காரைநகர்)
  6. திரு.க.செ.வேலுப்பிள்ளை(பிரபல வர்த்தகர்)
  7. திரு.க.இ.அம்பலவாணர்(பென்சனியர்)
  8. திரு.க.சி.நடராசா(பிரபல வர்த்தகர்)
  9. திரு.சி.ஆ.விநாயகசிவம்பிள்ளை(ஆசிரியர்)
  10. திரு.மு.பொன்னம்பலம்(ஆசிரியர்)
  11. திரு.க.கனகசபை(ஆசிரியர்)
  12. திரு.இ.நாகலிங்கம்(முகாமையாளர்-வியாவில் சைவ வித்தியாலயம்)
  13. திரு.மு.வைத்திலிங்கம்(அரசாங்க சேவை)
  14. திரு.ஆ.ச.கதிரவேலு(அரசாங்க சேவை)
  15. திரு.மு.சீவரத்தினம்(ஆசிரியர்)
  16. திரு.வை.செல்லத்துரை(X’ray உதவியாளர்)

தீர்மானங்களாவன:-

  1. காரைநகர் மேற்கில் தனிப்பட்ட சைவ ஆங்கிலக் கல்லூரியொன்று நிறுவுதல் (பிரம்மஸ்ரீ கா.சி.மஹேச சர்மா அவர்கள் இப்பிரேரணையை முன்மொழிய திரு.ஆ.ச.கதிரவேலு அவர்கள் வழிமொழிந்தார். இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது)
  2. nஷ கல்லூரியை நிறுவுவதற்கான நிலமும் பொருளும் முன்னதாகவே ஒழுங்கு செய்யப்படுதல் வேண்டும் (திரு.க.செ.வேலுப்பிள்ளை அவர்கள் முன்மொழிய திரு.சி.ஆ.விநாயகம்பிள்ளை அவர்கள் வழிமொழிந்தார். இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.)
  3. திரு.சி.ஆ.கணபதிப்பிள்ளை அவர்கள் nஷ கல்லூரி நிறுவுவதற்கு 20 பரப்பு நிலம் வாங்கி நன்கொடை செய்வதாக வாக்குப் பண்ணினார். அங்கத்தினர் அகமகிழ்வோடு ஏற்று நன்றிகூற கூட்டம் இனிது நிறைவேறியது.

தீர்மானங்கள் செவ்வனவே நிறைவேற்றப்பட்டதன் விளைவாக திரு.சி.ஆ. கணபதிப்பிள்ளை (தலைப்பா) அவர்கள் கல்லூரிக்கு நன்கொடையாக அளித்த நிலத்தில் 1947ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி புதன்கிழமை தைப்பூசமும் பூரணைதிதியும் கொண்ட நன்னாளில் கல்லூரி உதயமானது. திரு.க.கனகசபை அவர்களை தலைமை ஆசிரியராகக்கொண்டு உதவி ஆசிரியர்களாக திரு.மு.பொன்னம்பலம், திரு.மு.சீவரட்ணம் ஆகியோரும் கடமையாற்றினர். பின்னர் திரு.C.K.முருகேசு அவர்களும் கணித ஆசிரியராக நியமனம் பெற்றார். முதலில் 'New English School' என்ற பெயருடன் கல்லூரி 57 மாணவர்களுடனும் 4 ஆசிரியர்களுடனும் தோற்றம் பெற்றது. 1947 மே மாதத்தில் மாணவர் தொகை 127 ஆனது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 172 பிள்ளைகள் கற்றனர். 8 ஆசிரியர்கள் கற்பித்தனர் 5 ஆம் வகுப்பில் இருந்து கல்விப்பொதுத்தராதரப் பத்திர 1ஆம் வருடம் வரை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வாறு கல்லூரி வளர அரசாங்கத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட பல்வேறு வகையான கஷ்டங்களையும் நிவர்த்தி செய்து பதிவு செய்த பெருமை முன்னாள் சட்டசபைத்தலைவர் சேர் வைத்தியலிங்கம் துரைச்சாமி அவர்களையே சாரும். 1947ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதியிலிருந்து கல்லூரியானது அரசாங்க உதவி நன்கொடை பெறும்  தனியார் கல்லூரியாக அங்கீகரிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல்தர கல்லூரியாக தரமும் உயர்த்தப்பட்டது.

கல்லூரி தரம் உயர்த்தப்படவே அதற்கு ஒரு புதிய அதிபர் தேவையும் ஏற்பட்டது. இதனால் யாழ்ப்பாணம் நீராவியடியைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும் பணிபுரிந்த திரு.ஐயாத்துரை கருணானந்தம் அவர்களை கல்லூரிச்சமூகம் அதிபராக நியமிக்க அவர் விருப்பம் கேட்கப்பட்டது. அவர்கள் இக்கல்லூரிக்கு "YARLTON COLLEGE" எனவும் தமிழில் "யாழ்நகர்க் கலாசாலை" எனவும் பெயர் சூட்ட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்து இணக்கம் தெரிவித்தார். கல்லூரிச் சமூகம் இதனை ஏற்றுக்கொள்ள திரு.ஐ.கருணானந்தம் அவர்கள் 1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ம் திகதி அதிபராக நியமனம் பெற்றார். NEW ENGLISH  SCHOOL என்ற பெயருடைய பாடசாலை 'YARLTON COLLEGE' என்ற பெயருடன் இன்றும் திகழ்கின்றது. இது அவரின் பெருமைக்கும், கல்லூரி வளர்ச்சியில் அவர் கொண்ட ஆர்வத்துக்கும் எடுத்துக்காட்டாக அமைகின்றது.

முதல் அதிபராகக் கடமையாற்றிய திரு.க.கனகசபை அவர்கள் வேதனமின்றிச் சேவையாற்றியமை  குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் கல்லூரியின் கல்விசார் நடவடிக்கைகளிலும் கல்லூரி அபிவிருத்தியிலும் பெரும் பங்காற்றியவர் காரைநகர் முல்லைப்புலவைச் சேர்ந்த திரு.வேலாயுதர் முருகேசு(Auditor முருகேசு என அழைக்கப்படுபவர்) ஆவார். 'யாழ்ற்ரன் தான் நான், நான் தான் யாழ்ற்ரன்' எனக்கூறி அருந்தொண்டாற்றியவர்.

மேலும் கல்லூரி ஆரம்பித்த இக்காலத்தில் தனது 20 பரப்புக் காணியை நன்கொடையாக வழங்கிய காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த திரு.சி.ஆ.கணபதிப்பிள்ளை (தலைப்பா) கல்லூரி ஆரம்பித்த காலத்தில் நன்கொடை நிதிப்பட்டியலில் பணத்தின் தொகையினைக் குறிப்பிடாது 'நிலத்தின் விலை' என்று எழுதி 20 பரப்பு நிலத்தை விலையாக வாங்கி நன்கொடையாக வழங்கிய பெரியார் ஆவார். காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த திரு.E.V.கார்த்திகேசு அவர்கள் இக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியதோடு விஞ்ஞான ஆய்வுகூட அமைப்பின் செலவையும் தாமே ஏற்றுச்செய்து முடித்தவர்.

கல்லூரிக்காக திரு.வை.காசிப்பிள்ளை அவர்கள் தமது 20 பரப்பு நிலத்தை சகாயமான விலையில் வழங்க முன்வந்து உதவியமை குறிப்பிடத்தக்கது. மேலும் திரு.சி.ஆ.விநாயகம்பிள்ளை அவர்கள் கல்லூரிக்கு நிதி தேவையாக இருந்த காலங்களில் கடன்பட்டேனும் நிதி உதவி செய்த பெருந்தகை ஆவார்.

மேற்குறிப்பிட்டவர்களின் நன்கொடைகளும் மேலும் பல பெரியார்களின் நன்கொடைகளாலும் யாழ்ற்ரன் கல்லூரி என்ற பெயருடன் காரை வித்தியா பரிபாலன சபை (KARAI BOARD OF EDUCATION) யின் முகாமையாளர்களினால் கல்லூரி நிர்வகிக்கப்பட்டு வளர்ச்சியடைய ஆரம்பித்தது.

காரை வித்யா பரிபாலன சபையின் செயற்குழுவில் ஆரம்பத்தில் 30 அங்கத்தவர்களும் அதிகார சபையில் 11 அங்கத்தவர்களும் அங்கம் வகித்தனர். திரு.வே.தில்லைநாதன் அவர்கள் தலைவராகக் கடமையாற்றினார். திருவாளர்கள் K.S. சோமசுந்தரம், K.S. வேலுப்பிள்ளை, S.A. கணபதிப்பிள்ளை, A.T. ஆறுமுகம் ஆகியோர் முறையே கல்லூரி முகாமையாளர்களாகக் கடமையாற்றிய காலத்தில் கல்லூரியின் வளர்ச்சிக்காக அவர்கள் ஆற்றிய பணிகள் போற்றத்தக்கன. காரை வித்தியா பரிபாலன சபையினரால் வளர்க்கப்பட்ட கல்லூரி 1961ஆம் ஆண்டிலிருந்து அரசினரால் பொறுப்பேற்கப்பட்டது.

இக்காலத்தில் அதிபராக இருந்த திரு ஐ.கருணானந்தம் அவர்கள் கற்பித்தலில் புதிய நுட்பங்களைக்கொண்டு வந்தார். 'செயற்பாடு மூலம் கற்றலே' அவரின் ஒரே கல்விச் சிந்தனையாக இருந்தது. பல்வேறு உள்ளக விளையாட்டுக்களில் ஆர்வங்கொண்டு விளங்கி, மாணவர்களுக்கும் அவ் உள்ளக விளையாட்டுக்களில் ஆர்வம் ஊட்டினார். Tennis விளையாடுவதில் பெரிதும் கெட்டிக்காரன். காரைநகர் முல்லைப்புலவை அண்டிய கடற்கரைக்கு அவர் YARLTON BEACH எனவும் பெயர்சூட்டி மகிழ்ந்ததாக சில பழைய மாணவர் மூலம் அறியக்கிடக்கிறது. சிறந்த கல்விமானான திரு.ஐ.கருணானந்தம் அவர்கள் 1949 ஆகஸ்ட் 31 ஆம் திகதிவரை பணிபுரிந்து பின்னர் கண்டி Trinity College க்கு இடமாற்றம் பெற்றுச்சென்று பின் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் இறுதியாக 1980 களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விப்பீடத்திலும் சிரேஸ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றினார். இவர் யாழற்ரன் கல்லூரிக்குச் செய்த சேவையை கல்லூரிச் சமூகம் என்றும் நன்றியுடன் நினைவுகூரும்.

1949 செப்ரெம்பர் 1ஆம் திகதி முதல் இளவாலையை பிறப்பிடமாகக் கொண்ட திரு.க.சிவராஜா அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார். கல்லூரி வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக செயற்பட்ட ஒரு கர்மவீரர். இவர் காலத்தில் 1953ஆம் ஆண்டு உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. மாணவர்களின் ஆங்கிலக்கல்வியை விருத்தி செய்வதற்காக வகுப்பறைகளில் ஆங்கிலபாடக் கற்பித்தலை மேற்கொண்டார். இவரின் ஆங்கிலக் கற்பித்தல் பாணி, விளங்க வைக்கும் ஆற்றல் என்பவற்றை பல பழைய மாணவர்கள் வெகுவாகப் பாராட்டுவர்.

இவர் காலத்தில் விளையாட்டுத்துறை விருத்தியடைந்து உதைபந்தாட்டக்குழு, கிரிக்கட் விளையாட்டக்குழு என்பவைகளை ஏற்படுத்தினார். வருடந்தோறும் இல்ல விளையாட்டுப்போட்டியை நடாத்துவித்தார். இவரது அர்ப்பணிப்புடன் கூடிய உன்னதமான சேவையால் யாழ்ற்ரன் கல்லூரி மிகக்குறுகிய காலத்தில் சிறந்த தரம் பெற்ற கல்லூரியாக மிளிர ஆரம்பித்தது. இவரின் சேவையை கல்லூரிச் சமூகம் என்றும் நன்றியுடன் நினைவு கூருகின்றது. 31.12.1967 இல் அதிபர் திரு சிவராஜா அவர்கள் இளைப்பாறினார். ஓய்வு பெற்று 2 ஆண்டுகளின் பின்னர் 22.11.1970 இல் இறைவனடி சேர்ந்தார். இவரது இறுதிக்கிரியைகள் நடைபெற்ற தினமான 23.11.1970 அன்று அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக கல்லூரி விடுமுறையாக்கப்பட்டது.

01.01.1968 தொடக்கம் 11.09.1970 வரை திரு.மு.வைத்தியநாதன் அவர்கள் வரை கல்லூரி அதிபராகக் கடமையாற்றினார். விஞ்ஞானக் கல்வியை அபிவிருத்தி செய்ய பெரு ஆர்வத்துடன் செயற்பட்டார். மாணவர் ஒழுக்கம், கட்டுப்பாடு, சைவசமய விழுமியங்களை மாணவர் கடைப்பிடித்தல் போன்ற விடயங்களில் பெரிதும் அக்கறையாக செயற்பட்டவர். இவர் காலத்தில் 19.06.1968 அன்று இந்தியப் பேரறிஞர் சுத்தானந்த பாரதியார் கல்லூரிக்கு வருகைதந்து உரையாற்றியுள்ளார். 27.06.1969 அன்று கல்லூரியின் திறந்தவெளிக்கான மேடை திறக்கப்பட்டது. இதனால் கல்லூரியில் ஒரு சிறந்த திறந்தவெளி அரங்கு அமைக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டில் இருந்து இத் திறந்த வெளி அரங்கத்தில் பல கலை நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. அக்காலத்தில் இது காரைநகரில் நடைபெற்ற பொது வைபவங்களுக்கு களமாக அமைந்தது. ஈழத்துச்சிதம்பர திருப்பணி நிதிக்காக நடாத்தப்பட்ட 'மணி ஓசை' என்ற நாடகம் எமது கல்லூரி திறந்தவெளி அரங்கு மேடையில் 1969 ஆம் ஆண்டு முதன்முதலாக அரங்கேற்றப்பட்டது.

திரு.மு.வைத்தியநாதன் அவர்களுக்குப் பின் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த திரு.மு.கைலாயநாதன் அவர்கள் 12.09.1970 முதல் 30.04.1971 வரை அதிபராகப் பணியாற்றினார். இவர் காலத்தில் ஆரம்பப் பாடசாலையான தங்கோடை அமெரிக்கன் மிஷன் பாடசாலை (கோவிந்தர் பள்ளிக்கூடம்) 05.02.1971 இல் எமது கல்லூரியுடன் இணைக்கப்பட்டது. அன்றிலிருந்து யாழ்ற்ரன் கல்லூரி தரம் 01 முதல் க.பொ.த (உ/த) வகுப்புக்கள் கொண்ட பாடசாலையாக இயங்க ஆரம்பித்தது. 31.08.1971 இல் அதிபர் திரு. கைலாயநாதன் அவர்கள் இடமாற்றலாகிச் சென்றார். 01.05.1971 இல் மூளாயைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.N.வேலுப்பிள்ளை அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்று சிறந்த முகாமையாளராக 08.02.1983 வரை சுமார் 12 ஆண்டுகாலம் சேவை செய்தார். இவர் காலத்தில் 1971 ம் ஆண்டு தற்போதைய அதிபர் அலுவலகத்திற்கு மேற்புறமாக அமைந்த மண்டபம் (தற்போதைய ஆசிரியர் அறையும் அதனுடன் சேர்ந்த மூன்று வகுப்பறைகளும்) அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.தியாகராசா அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டு 1971 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் திறக்கப்பட்டது. இம் மண்டபம் முன்னாள் அதிபர் சிவராஜா ஞாபகார்த்த மண்டபமாகப் பெயர் சூட்டப்பட்டது.

1972 ம் ஆண்டு வெளியிடப்படவேண்டிய வெள்ளி விழா மலர் 1974ம் ஆண்டு 'யாழ்ற்ரன்' என்ற பெயருடன் சிறந்த முறையில் வெளியிடப்பட்டது. 1975ம் ஆண்டு அரசின் உதவியால் பிரதான மண்டபம், அதிபர் அலுவலகம், நூலகம் கொண்ட தொகுதி நிர்மாணிக்கப்பட்டது. அரசின் உதவியால் இக்கட்டடத்தொகுதி அமைக்கப்பட்டபோது இக்கட்டட வேலைகளில் அக்காலத்து பெற்றோர்களின் ஒத்துழைப்பும் இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். காரைநகர் ஆலடி திரு.S.தில்லையம்பலம் அவர்கள் கட்டட நிர்மாணப்பணிகளில் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மறக்கமுடியாதவை ஆகும். 1975ம் ஆண்டில் ஆரம்பப் பிரிவுக்கு 60' x 20' கொண்ட வகுப்பறைத்தொகுதியும் அமைக்கப்பட்டது. 1976  ஆம் ஆண்டு உயர்தர விஞ்ஞான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. பல மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுச்சென்றனர். 12 ஆண்டு காலம் அதிபர் திரு.N.வேலுப்பிள்ளை அவர்கள் மாணவர்களை மிகுந்த ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் பேணி ஒரு தன்னலமற்ற சேவையைச் செய்துள்ளார்.

09.02.1983 இல் காரைநகர் பயிரிக்கூடலைச் சேர்ந்த திரு.K.K. நடராஜா அவர்கள் அதிபராகக் கடமையேற்றார். சிறந்த கணித ஆசிரியரான இவர் க.பொ.த (சா.த) வகுப்புக்களில் கணித பாடத்தை திறமையாகக் கற்பித்தார். ஆசிரியர், மாணவர்களுடன் அன்பு கலந்த கண்டிப்புடன் நடந்து கொண்டார். கல்லூரியை சிறந்த கவின் நிலை கொண்டதாக பேணி வந்துள்ளார். 4 ஆண்டுகள் தன்னலமற்ற சேவையை வழங்கிய திரு.K.K நடராசா அவர்கள் 08.10.1987 இல் இடமாற்றம் பெற்றுச் சென்றார்.

09.10.1987 பண்ணாகத்தைச் சேர்ந்த திரு.S.பத்மநாதன் அவர்கள் கடமை ஏற்று குறுகிய காலத்தின் பின் 15.08.1989 இல் இடமாற்றம் பெற்றுச் சென்றார். இவர் மாணவர்கள் கல்விக்கு ஒழுக்கம் கட்டாயமானது என்பதை வலியுறுத்தி மாணவர்களை ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் வழிநடாத்தியவர்.

16.08.1989 இல் காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த திரு.K.K.S.சேனாதிராசா அவர்கள் அதிபராக நியமிக்கம்பட்டார். 1989 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்கள் கல்வியைத் தொடர கல்வி அமைச்சினால் தெரிவுப் பாடசாலைப் பட்டியலில் யாழ்ற்ரன் கல்லூரியும் சேர்க்கப்பட்டது. கல்லூரி 1989 இல் 1310 மாணவர்களையும் 23 ஆசிரியர்களையும் கொண்டு விளங்கியது. 30.01.1990 இல் கல்லூரியின் விளையாட்டு மைதானத்திற்கான பவிலியன் திறந்து வைக்கப்பட்டது. இது அமரர் பரமநாதன் ஞாபகார்த்தமாக அவரது துணைவியார் திருமதி.மனோன்மணி பரமநாதன்  அவர்களின் அனுசரணையால் அமைக்கப்பட்டது.

சிறிது காலம் இயங்காமல் இருந்த க.பொ.த (உ.த) விஞ்ஞான வகுப்புக்கள், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் ஆகியோர் எடுத்த பெருமுயற்சியினால் மீண்டும் 30.01.1991 இல் ஆரம்பிக்கப்பட்ட.

25.04.1991 இல் உள்நாட்டு யுத்தம் காரணமாக 2% மக்கள் மட்டும் ஊரிலே வசிக்க ஏனைய எல்லோரும் இடம்பெயர்ந்து அயல் ஊர்களிலும், யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களிலும் சென்று வசிக்க ஆரம்பித்தனர். மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் சன்மார்க்க வித்தியாலயத்திலும் காரைநகர் கொத்தணிப் பாடசாலைகள் என்ற பெயரில் மாலை நேரத்தில் 1991 மே மாதம் தொடக்கம் நடந்தன. இந் நிலையில் கல்லூரி அதிபராக இருந்து திரு.K.K.S.சேனாதிராசா அவர்கள் 07.06.1992 இல் ஓய்வு பெற்றார்.

10.08.1992 இல் கல்லூரியின் பழையமாணவரும் காரைநகர் பலகாட்டைச் சேர்ந்தவரும், கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவருமான திரு.ந.பரமசிவம் (B.A) அவர்கள் கல்லூரி அதிபராக நியமிக்கப்பட்டார். மிக நெருக்கடியான காலகட்டத்தில் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட அதிபர் பரமசிவம் அவர்கள் கல்லூரியை தனித்துவமாக இயங்க வைக்க பெரு முயற்சிகளை மேற்கொண்டார். இதன் பயனாக வட்டுக்கோட்டை மாவடியில் அமைந்த அடைக்கலம் தோட்டம் கந்தசுவாமி கோவில் கலியாண மண்டபத்தில் (சுப்பிரமணியம் கந்தமுத்து ஞாபகார்த்த மண்டபம்) 06.02.1993 இல் யாழ்ற்ரன் கல்லூரி என்ற பெயருடன் செயல்பட ஆரம்பித்தது.

காரைநகரில் இருந்து இடம்பெயர்ந்த மாணவர்கள் கற்பதற்கு இடர்பட்ட இவ்வேளையில் கல்லூரியை தனித்துவமாக செயற்பட வைத்து கல்லூரியின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை ஆரம்பித்தமைக்காக கல்லூரி அதிபரை பெற்றோரும் கல்வித்திணைக்களத்தினரும் வெகுவாகப் பாராட்டினர்.

மாணவர்கள் இருந்து கற்பதற்கு தேவையான தளபாடங்கள், கரும்பலகைகள் போன்ற பலவற்றை கல்லூரியின் பழைய மாணவர்கள் செய்து கொடுத்தனர். இதனால் 06.02.1993 முதல் கல்லூரி வழமைபோல் செயல்பட ஆரம்பித்தது. கல்லூரியின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மட்டுமன்றி இணைப்பாட விதானச் செயற்பாடுகளும் வினைத்திறனுடன் நடைபெற்றன. 14.05.1993 இல் வருடாந்த இல்லவிளையாட்டுப்போட்டி கல்லூரி அதிபர் தலைமையில் விமரிசையாக நடைபெற்றது. 15.06.1993 இல் கல்லூரியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி இடம்பெயர்ந்த நிலையிலும் கல்லூரியின் செயற்பாடுகள் அனைத்தும் திறமையாகவே நடைபெற்றன.

கல்விசார் அடைவுமட்டங்கள் உயர்வு நிலையை நோக்கிச் சென்றுள்ளன. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகளவிலான மாணவர்கள் இவ் இக்கட்டான காலகட்டத்தில் சித்தியடைந்துள்ளனர். உயர்தர வகுப்புக்களில் சகல துறைகளும் செயற்பட்டு மாணவர்கள் பலர் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர். க.பொ.த (உ.த) கணிதப்பிரிவு, விஞ்ஞானப் பிரிவுகள் இடம்பெயர்ந்த நிலையிலும் நடைபெற்றுள்ளன. மாணவர் கற்றல் நடவடிக்கை சிறப்பாக நடைபெற்றதன் காரணமாக மாணவர் தொகை அதிகரித்து கிடுகிலான கொட்டகைகள் அமைக்கப்பட்டு வகுப்பறைகள் செயற்பட்டன. சிறந்த முறையில் கல்லூரி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந் நாட்களில் 30.10.1995 இல் மீண்டும் வட்டுக்கோட்டையை விட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனினும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்காக அதிபர் பரமசிவம் அவர்கள் பருத்துறை தும்பளை சைவப்பிரகாச வித்தியாலயத்தில் (மக்களில் பெரும்பாலானோர் வடமராட்சி, தென்மராட்சியில் இருந்தனர்) கல்லூரியை இயக்க நடவடிக்கை எடுத்து மீண்டும் அங்கு 01.02.1996 முதல் மாலை நேரப்பாடசாலையாக 392 மாணவர்களுடன் இயங்க ஆவன செய்தார்.

1996 ஏப்பிரல் 19 ஆம் திகதியில் இருந்து மக்கள் மீண்டும் காரைநகருக்கு படிப்படியாக வந்து குடியமர ஆரம்பித்தனர். 25.05.1996 இல் அதிபர் கடற்படையிடம் இருந்த இக்கல்லூரியை மீளவும் பொறுப்பேற்றார். இதன் காரணமாக 24.07.1996 தொடக்கம் கல்லூரி தனது சொந்த இடத்தில் 162 மாணவர்களுடனும் 6 ஆசிரியர்களுடனும் இயங்க ஆரம்பித்தது. கல்லூரியில் பௌதீக வளப்பற்றாக்குறைகள் காணப்பட்டன. கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும், இணைப்பாடவிதான செயற்பாடுகளும்  விருத்தியடைய மாணவர் தொகை விரைவாக அதிகரித்தது. 1999 இல் 635 மாணவர்களும் 26 ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டனர்.

கல்லூரி தனது சொந்த இடத்தில் சிறந்த கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுடன் மீண்டும் வளர ஆரம்பித்தது. பௌதீக வளர்ச்சியின் ஒரு அங்கமாக சிறந்த ஒரு விஞ்ஞான ஆய்வுகூடம் அமைக்கப்பட்டு 09.11.2001 இல் திறந்து வைக்கப்பட்டது. 2004ம் ஆண்டு NECORD நிறுவன உதவியுடன் 9 வகுப்பறைகளைக்கொண்ட 2மாடிக்கட்டடம் விளையாட்டு மைதானத்தின் கிழக்குப்புறமாக அமைக்கப்பட்டது. விளையாட்டு மைதான விஸ்தரிப்பிற்காக 13 பரப்புக் காணி பெறப்பட்டு விளையாட்டு மைதான விஸ்தரிப்பு வேலைகள் ஆரம்பமாகின. கல்லூரியின் கல்வி அடைவு மட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் பலர் சித்தியடைந்ததுடன் உயர்தரப் பரீட்சையில் பல மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்று உயர்கல்விக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் கல்லூரி முன்றலில் உள்ள பூங்கா ஒன்றும் 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் பழைய மாணவர் ஒருவர் அதிபராக இருந்தமை இதுவே முதல் தடவையாகும். தன்னலமற்ற அதிபர் பரமசிவம் அவர்கள் தனது 60 ஆவது வயதில் 17.11.2009 இல் ஓய்வுபெற இருந்தும் இவரின் சேவையை மேலும் நீடிக்க கல்விப்பணிப்பாளர் அங்கீகாரம் வழங்கியிருந்தார். கல்லூரியின் தனித்துவத்திலும், மாணவர் ஒழுங்கு. கட்டுப்பாடு என்பவற்றில் மிகவும் கண்டிப்பாகவும் அக்கறையாகவும் செயற்பட்டார். கிட்டத்தட்ட 2 தசாப்த காலம் அதிபராக இருந்தவர் திரு.பரமசிவம் ஆவார். இவர் 01.03.2010 இல் ஓய்வு பெற்றார். அவரது சேவையை கல்லூரிச்சமூகம் என்றும் நன்றியுடன் நினைவுகூருகின்றது.

கல்லூரியின் பொறுப்பை உபஅதிபராக இருந்த திருமதி கமலாம்பிகை லிங்கேஸ்வரன் அவர்கள் 02.03.2010 இல் பொறுப்பேற்றார். 16.06.2010 இல் காரைநகர் கருங்காலியைச் சேர்ந்த திரு க.சோமசேகரம் அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார்.

மாணவர் கற்றல் கற்பித்தல் விருத்தியடைய மிகவும் துரிதமாகச் செயற்படடார். க.பொ.த (சா.த) வகுப்புக்களில் கணித பாடத்ததைக் கற்பித்து அப்பாடத்தின் அடைவை உயர்த்த கரிசனையாக இருந்தவர். 2010ம் ஆண்டு விசேட தேவையுடைய மாற்று வலுவுடையோருக்கான ஒரு நிலையம் கல்லூரியில் அமைக்கப்பட்டது. தீவகக் கல்வி வலயத்தில் இன்னும் அது தனிச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மாணவர்களின் உள்ளக விளையாட்டுக்கள் விருத்தியடைய இதற்கான ஓர் அறை ஓதுக்கப்பட்டு இவ்விளையாட்டுக்கள் செயற்பட ஆரம்பித்தன. அதிபர் சோமசேகரம் அவர்களின் முயற்சியினால் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் விளையாட்டு மைதானத்தைச்சுற்றி முட்கம்பி வேலி அமைக்கப்பட்டது. சிறிது காலம் சேவையாற்றிய சோமசேகரம் அவர்கள் ஊர்காவற்துறைப் பிரதேசக் கோட்டக்கல்வி ப்பணிப்பாளராக பதவியுயர்வு பெற்று 28.04.2011 இல் இடமாற்றம் பெற்றுச்சென்றார். மீண்டும் சிறிதுகாலம் திருமதி கமலாம்பிகை லிங்கேஸ்வரன் அவர்கள் பதில் அதிபராகக் கடமையாற்றினார்.

07.09.2011 காரைநகர் சடையாளியைச் சேர்ந்த திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் அதிபராக பொறுப்பேற்று நடாத்தி வருகின்றார். 2012 ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 12 மாணவர் சித்தியடைந்தனர். இதனால் தீவகக் கல்வி வலயத்தில் மிகக்கூடிய சித்தியடைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பாடசாலையாக கல்லூரி விளங்கியது. அத்துடன் இப்பெறுபேறு யாழ்ப்பாண மாவட்டத்தில் 10ம் இடத்தை எமது கல்லூரி பெறவும் வாய்ப்பளித்தது. 2012ம் ஆண்டு விஞ்ஞான புத்தாக்க ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட புத்தாக்கப் போட்டியில் கல்லூரி மாணவர் இரு புத்தாக்கங்களை கண்டுபிடித்து தேசிய மட்டத்தில் Merit Award பெற்றனர். மேலும் 2012 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகார சபையினரால் நடாத்தப்பட்ட சிறுவர் கழகங்களுக்கிடையிலான போட்டியில் கரக நடனம் நிகழ்ச்சியில் தேசிய மட்டத்தில் 3ம் இடத்தினையும், சங்கீதம் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியில் தேசிய மட்டத்தில் 3ம் இடத்தினையும் பெற்றனர். மேலும் இவ்வாண்டில் கணித நாடகப்போட்டியில் கல்லூரி மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் 3ம் இடத்தை பெற்றுள்ளனர்.

2012ம் ஆண்டு பௌதீக வள விருத்தியில் கிழக்குப்புற 6 வகுப்பறைகள் மூடி அமைக்கப்பட்டன. கிழக்குப்புற கூரைகள் முழுமையாக மாற்றப்பட்டன. ஓடுகள் யாவும் இப்பகுதிக்கு புதிதாக இடப்பட்டன. மேலும் குறையாக முடிவுறா நிலையில் இருந்த விஞ்ஞான ஆய்வுகூட மேற்தளம் 52 இலட்சம் ரூபா செலவில் கல்வித்திணைக்களத்தினால் கட்டி முடிக்கப்பட்டு அங்கு 36 கணினிகள் கொண்ட சிறப்பான கணினிஆய்வு கூடமுமாக Interactive Board, Document Camera, Multimedia Projectors மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஒரு பல்லூடக அறையும் கொண்டு திகழ்கின்றது.

2013 ம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் 6 மாணவர் 5 A யும் அதற்குக்கூடிய பெறுபேறுகளையும், 1மாணவி பல்கலைக்கழக கலைப்பீடத்திற்கும் தெரிவாகினார். கல்லூரியின் நடுவில் அமைந்த திறந்த வெளி அரங்கு 2013 ம் ஆண்டில் மதில் கட்டி வேறாக்கப்பட்டு புற்கள் பதிக்கப்பட்டன. 2013 மே மாதம் தொடங்கி மாணவர்களின் கல்லூரித் தனித்துவத்தை பேணும் வகையில் காலுறைகளுக்கு கல்லூரியின் நிறங்களான நீலமும் மஞ்சளும் சார்ந்த வரிக்கோடுகள் இடப்பட்டு அதனை மாணவர்கள் அணிந்து வருகின்றனர்.

2013 ஆம் ஆண்டிலே கொழும்பு ITN தொலைக்காட்சி நிறுவனத்தினரால் நடாத்தப்பட்ட புத்தாக்கப்போட்டியில் மாணவர்கள் பங்குபற்றி அதில் திறமையாக செயற்பட்டனர். 2013ஆம் ஆண்டிலே மாண்புமிகு இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச அவர்கள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஹெலிகொப்ரர் மூலம் வந்து இறங்கி கல்லூரியை பார்வையிட்டு பின்னர் மணற்காட்டு முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

2014 ஆம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் 5 Aயும் அதற்குக்கூடவும் 6 மாணவர்கள் சித்தி பெற்று 70% மாணவர் க.பொ.த (உ.த) கற்கத் தகைமை பெற்றும் தீவகக்கல்வி வலயத்தில் முதன்மையான பெறுபேற்றை கல்லூரி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 2014ஆம் ஆண்டு க.பொ.த (உ.த) பரீட்சையில் கலைப்பீடத்திற்கு 3 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர். 2014ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 09 மாணவர்கள் சித்தி பெற்றுக்கொண்டமையானது  தீவகக் கல்வி வலயத்தில் முதன்மைப் பெறுபேறாகவுள்ளது. 2014இல் வாழ்வின் எழுச்சித்திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சிறுவர் கழகங்களுக்கிடையிலான கிராமிய நடனப் போட்டியில் கல்லூரி மாணவிகள் தேசியமட்டத்தில் முதலாம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதோர் வெற்றியாகும்.

தமிழ்த்தினப் போட்டியின்போது மாகாண மட்டத்தில் ஒரு மாணவன்  தனிநடனத்தில் 2012 ஆம், 2015ஆம் ஆண்டுகளில் 2ஆம் இடத்தைப்பெற்றுள்ளார். 2014ம் ஆண்டில் அனர்த்த முகாமைத்துவப் போட்டியில் மாகாண மட்டத்தில் கல்லூரி மாணவர்கள் 3 ஆம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

2014ஆம் ஆண்டிலே கல்லூரியின் முன்றலில் காரைநகர் கோவளத்தைச் சேர்ந்தவரும் கல்லூரியின் பழைய மாணவனுமாகிய சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் அனுசரணையில் சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியின் முன்பகுதி மதில்கள் அகற்றப்பட்டு புதிய தோற்றத்துடன் மதில் நிர்மாணிப்பதற்கும் அனுசரணையாளரான சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் பேருதவி கிடைத்தது.

2015 ஆம் ஆண்டிலே தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 7 மாணவர்கள் சித்தியடைந்தமை தீவகக் கல்வி வலயத்தில் முதன்மைப் பெறுபேறாகவுள்ளது. 2015ஆம் ஆண்டிலே சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் அனுசரணையில் கல்லூரி முன்றலில் நுழைவாயில் வளைவும், 65 அடி நீளமான புதிய சைக்கிள் கொட்டகையும் அமைக்கப்பட்டன. இவ்வாண்டிலே கல்லூரியின் பழைய மாணவி திருமதி கேதீஸ்வரி கமலச்சந்திரன் (ஆலடி காரைநகர் ) அவர்களால் விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்காக 6 பரப்புக்காணி வாங்கி நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த திரு S. கணநாதன் (தலைப்பா கணபதிப்பிள்ளை பேரன்) அவர்களால் 2 1/4பரப்புக் காணி வாங்கி நன்கொடையாக கல்லூரி விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்காக வழங்கப்பட்டது.

2015 ம் ஆண்டில் மாகாண மட்டத்து பண்ணிசைப்போட்டி, புராண படனம் போட்டிகளில் கல்லூரி மாணவர்கள் 1 ஆம் இடத்தைப்பெற்றுள்ளனர். மாகாணமட்ட வணிகப்போட்டியில் (குறு வினாவிடைப்போட்டி) மாணவன் ஒருவர் மாகாண மட்டத்தில் 3ம் இடத்தையும் மாகாணமட்ட ஆங்கில தினப்போட்டியில் ஒரு மாணவி English News Reading போட்டியில் 2ம் இடத்தையும் சித்திரப்போட்டியில் மாணவன் ஒருவர் 2ம் இடத்தையும் பெற்றமை சிறப்பு மிக்க மாகாணமட்ட வெற்றிகள் ஆகும்.

2013 ம் ஆண்டு கல்லூரி ஆசிரியை செல்வி சுபத்திராதேவி இராசசிங்கம் அவர்கள் கல்வி அமைச்சின் சிறந்த ஆசிரியருக்கான 'பிரதீபா பிரபா' விருதினையும் 2014 ம் ஆண்டு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் சிறந்த அதிபருக்கான 'பிரதீபா பிரபா' விருதினையும் பெற்றுள்ளனர். கல்லூரியின் இணைப்பாடவிதானத்தின் ஓர் அங்கமாக 2012ம் ஆண்டில் இருந்து சாரணர் இயக்கம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

2015ம் ஆண்டில் பெண் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டு காலத்தில் மாணவர்கள் தேசிய மட்டப் பரீட்சைகளிலும் மாகாணமட்டம் தேசிய மட்டங்களிலும் சாதனைகள் படைத்தமை மாணவர்களின் கல்வி சார் அடைவுமட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாகும். அத்துடன் கல்லூரியானது அதன் கவின் நிலை சிறப்பாக பேணப்பட்டு ஒரு நகர்ப்புறப் பாடசாலை போன்ற தோற்றத்துடன் திகழ்கின்றது. கல்லூரியின் இணையத்தளம் சிறந்த முறையில் தற்காலப்படுத்தப்படுகிறது. கல்லூரியின் சகல செய்திகளும் கல்லூரியின் இணையத்தளம்(yarlton.sch.lk), karainagar.com, karainews.com, karainagar.co ஆகிய காரைநகர் சார்ந்த இணையத்தளங்களுக்கு உடனுக்குடன் அனுப்பப்படுகின்றன.

வரலாறு எழுத துணை நின்றவை

  1. 'யாழ்ற்ரன்' வெள்ளிவிழா மலர் (1974 கல்லூரியின் வெளியீடு)
  2. 'யாழ்ற்ரன் ஞானஒளி'  (2005 கல்லூரி இந்து மாணவர் மன்ற வெளியீடு)
  3. யாழ்ற்ரன் கல்லூரியின் சம்பவத்திரட்டுப்புத்தகங்கள்
  4. கல்லூரியின் மூத்த பழைய மாணவர் திரு.S. கதிரவேலு அவர்கள் மூலம் பெற்ற தகவல்கள்
 


Powered by Joomla!.