Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
Sunday, 08 June 2014 00:57

 

Mr. N. Paramasivam (1992 - 2010)

10.08.1992 இல் கல்லூரியின் பழையமாணவரும் காரைநகர் பலகாட்டைச் சேர்ந்தவரும், கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவருமான திரு.ந.பரமசிவம் (B.A) அவர்கள் கல்லூரி அதிபராக நியமிக்கப்பட்டார். மிக நெருக்கடியான காலகட்டத்தில் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட அதிபர் பரமசிவம் அவர்கள் கல்லூரியை தனித்துவமாக இயங்க வைக்க பெருமுயற்சிகளை மேற்கொண்டார். இதன் பயனாக வட்டுக்கோட்டை மாவடியில் அமைந்த அடைக்கலம் தோட்டம் கந்தசுவாமி கோவில் கலியாண மண்டபத்தில் (சுப்பிரமணியம் கந்தமுத்து ஞாபகார்த்த மண்டபம்) 06.02.1993 இல் யாழ்ற்ரன் கல்லூரி என்ற பெயருடன் செயல்பட ஆரம்பித்தது.

காரைநகரில் இருந்து இடம்பெயர்ந்த மாணவர்கள் கற்பதற்கு இடர்பட்ட இவ்வேளையில் கல்லூரியை தனித்துவமாக செயற்பட வைத்து கல்லூரியின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை ஆரம்பித்தமைக்காக கல்லூரி அதிபரை பெற்றோரும் கல்வித்திணைக்களத்தினரும் வெகுவாகப் பாராட்டினர்.

மாணவர்கள் இருந்து கற்பதற்கு தேவையான தளபாடங்கள், கரும்பலகைகள் போன்ற பலவற்றை கல்லூரியின் பழைய மாணவர்கள் செய்து கொடுத்தனர். இதனால் 06.02.1993 முதல் கல்லூரி வழமைபோல் செயல்பட ஆரம்பித்தது. கல்லூரியின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மட்டுமன்றி இணைப்பாட விதானச் செயற்பாடுகளும் வினைத்திறனுடன் நடைபெற்றன. 14.05.1993 இல் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி கல்லூரி அதிபர் தலைமையில் விமரிசையாக நடைபெற்றது. 15.06.1993 இல் கல்லூரியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி இடம்பெயர்ந்த நிலையிலும் கல்லூரியின் செயற்பாடுகள் அனைத்தும் திறமையாகவே நடைபெற்றன.

கல்விசார் அடைவுமட்டங்கள் உயர்வு நிலையை நோக்கிச் சென்றுள்ளன. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகளவிலான மாணவர்கள் இவ் இக்கட்டான காலகட்டத்தில் சித்தியடைந்துள்ளனர். உயர்தர வகுப்புக்களில் சகல துறைகளும் செயற்பட்டு மாணவர்கள் பலர் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர். க.பொ.த (உ.த) கணிதப்பிரிவு, விஞ்ஞானப் பிரிவுகள் இடம்பெயர்ந்த நிலையிலும் நடைபெற்றுள்ளன. மாணவர் கற்றல் நடவடிக்கை சிறப்பாக நடைபெற்றதன் காரணமாக மாணவர் தொகை அதிகரித்து கிடுகிலான கொட்டகைகள் அமைக்கப்பட்டு வகுப்பறைகள் செயற்பட்டன. சிறந்த முறையில் கல்லூரி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந் நாட்களில் 30.10.1995 இல் மீண்டும் வட்டுக்கோட்டையை விட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனினும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்காக அதிபர் பரமசிவம் அவர்கள் பருத்துறை தும்பளை சைவப்பிரகாச வித்தியாலயத்தில் (மக்களில் பெரும்பாலானோர் வடமராட்சி, தென்மராட்சியில் இருந்தனர்) கல்லூரியை இயக்க நடவடிக்கை எடுத்து மீண்டும் அங்கு 01.02.1996 முதல் மாலை நேரப்பாடசாலையாக 392 மாணவர்களுடன் இயங்க ஆவன செய்தார்.

1996 ஏப்பிரல் 19 ஆம் திகதியில் இருந்து மக்கள் மீண்டும் காரைநகருக்கு படிப்படியாக வந்து குடியமர ஆரம்பித்தனர். 25.05.1996 இல் அதிபர் கடற்படையிடம் இருந்த இக்கல்லூரியை மீளவும் பொறுப்பேற்றார். இதன் காரணமாக 24.07.1996 தொடக்கம் கல்லூரி தனது சொந்த இடத்தில் 162 மாணவர்களுடனும் 6 ஆசிரியர்களுடனும் இயங்க ஆரம்பித்தது. கல்லூரியில் பௌதீக வளப்பற்றாக்குறைகள் காணப்பட்டன. கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும், இணைப்பாடவிதான செயற்பாடுகளும் விருத்தியடைய மாணவர் தொகை விரைவாக அதிகரித்தது. 1999 இல் 635 மாணவர்களும் 26 ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டனர்.

கல்லூரி தனது சொந்த இடத்தில் சிறந்த கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுடன் மீண்டும் வளர ஆரம்பித்தது. பௌதீக வளர்ச்சியின் ஒரு அங்கமாக சிறந்த ஒரு விஞ்ஞான ஆய்வுகூடம் அமைக்கப்பட்டு 09.11.2001 இல் திறந்து வைக்கப்பட்டது. 2004ம் ஆண்டு NECORD நிறுவன உதவியுடன் 9 வகுப்பறைகளைக்கொண்ட 2மாடிக்கட்டடம் விளையாட்டு மைதானத்தின் கிழக்குப்புறமாக அமைக்கப்பட்டது. விளையாட்டு மைதான விஸ்தரிப்பிற்காக 13 பரப்புக் காணி பெறப்பட்டு விளையாட்டு மைதான விஸ்தரிப்பு வேலைகள் ஆரம்பமாகின. கல்லூரியின் கல்வி அடைவு மட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் பலர் சித்தியடைந்ததுடன் உயர்தரப் பரீட்சையில் பல மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்று உயர்கல்விக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் கல்லூரி முன்றலில் உள்ள பூங்கா ஒன்றும் 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் பழைய மாணவர் ஒருவர் அதிபராக இருந்தமை இதுவே முதல் தடவையாகும். தன்னலமற்ற அதிபர் பரமசிவம் அவர்கள் தனது 60 ஆவது வயதில் 17.11.2009 இல் ஓய்வுபெற இருந்தும் இவரின் சேவையை மேலும் நீடிக்க கல்விப்பணிப்பாளர் அங்கீகாரம் வழங்கியிருந்தார். கல்லூரியின் தனித்துவத்திலும், மாணவர் ஒழுங்கு. கட்டுப்பாடு என்பவற்றில் மிகவும் கண்டிப்பாகவும் அக்கறையாகவும் செயற்பட்டார். கிட்டத்தட்ட 2 தசாப்த காலம் அதிபராக இருந்தவர் திரு.பரமசிவம் ஆவார். இவர் 01.03.2010 இல் ஓய்வு பெற்றார். அவரது சேவையை கல்லூரிச்சமூகம் என்றும் நன்றியுடன் நினைவுகூருகின்றது.

 


Powered by Joomla!.